ஓர் ஆலய நிர்மாணத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய சாஸ்திர
விதிகள் மிகவும் கடினமானவை, கடுமையானவை என்பது யாவரும் தெரிந்த செய்தி.
பணத்தையும் பொருளையும் திரட்டிக் கோயில் எழுப்புபவருக்கு யஜமானர் என்று பெயர். இவர் தகுந்த குருவை அடைந்து அவரது மேற்பார்வையில்தான் கோயில்
நிர்மாணப் பணியைத்தொடங்கவேண்டும். அந்த குரு பக்தியிலும், சமயச்சடங்கிலும் சிற்பக்
கலையிலும் சிறந்தவராக இருக்கவேண்டும். அவர்தான்
ஸ்தபதியைத் தேர்வு செய்து தருவார். ஸ்தபதிக்கு
உதவி செய்ய வரைபட நிபுணர், சிற்பி, கொத்தனார் போன்றவர்கள்
வருவர்.
கோயில் நிர்மாணம் செய்ய உறுதி பூண்ட நாள்முதல் கடுமையான விரதமிருக்க வேண்டும்.நிலத்தை சுத்தம் செய்து அதிலுள்ள
துர்தேவதை களை விரட்டி, நிலத்துக்கு புனிதச் சடங்குகள் செய்ய வேண்டும்.
கர்ப்ப நியாசம் எனப்படுகிற சடங்கு ஒன்று பூமியை உயிர்ப்பிப்பதற்காக நடத்தப்படும்.கோயில் மாதிரி அளவை
தாமிரத் தகட்டில் எழுதி நிலத்தில் வைத்து இரவு
நேரத்தில் பூஜித்து நிலத்திற்குள் வைப்பார்கள்.
வாஸ்து பிரகாரம் இடத்தைத் தேர்வு செய்து கொண்டு, வாஸ்து பூஜை செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அங்குரார்ப்பணம் என்கிற விதைகளை முளைக்கச் செய்து, மேற்கொள்ளப்படுகிற செயல்
தடையின்றி நடைபெற பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை
கோயில் கட்டும் முன்பும், கட்டி முடித்தவுடனும்,
சிலையை நிறுவும் முன்பும் செய்வார்கள். பதினாறு
செப்புப்பாத்திரத்தில் கடுகு, எள், நெல் போன்ற தானியங்களை முளைக்கச் செய்து
கடவுளுக்குப்படையல் போட்டு பூஜிப்பார்கள்.
இந்தச் சடங்கு முடிந்ததும் சிலான்யாசம் எனப்படுகிற அடிக்கல்
நாட்டும் சடங்கு நிகழ்த்தப்படும். கோயிலின் வடமேற்குப்
பக்கத்தில் இதைச் செய்து அதன் பிறகு அடித்தளம்
தோண்டுவார்கள். அடித்தளத்தை மண் போட்டு
மூடுவது போல கர்ப்பக் கிருகத்தை
மூடமாட்டார்கள். அதில் முக்கால் பகுதியை நிரப்பி
ஆதார சிலா என்ற அடிபீடத்திற்கான மேடை போன்ற
பெரிய கல்லை வைத்து, நிதிக்கும்பம் என்கிற குடம்,
ஆமை மற்றும் தாமரை வடிவத்திலுள்ள கல்லுருவங்கள் ஆகியவற்றை வைப்பார்கள்.
அதன் பிறகு வெள்ளியாலான ஆமை, தாமரை வைத்து பிறகு
பொன்னாலான ஆமை மற்றும் பொற்றாமரை வைத்து
பூசிப்பார்கள். இந்தப் பொருட்களுடன் ஒரு
தாமிரக் குழாய் பொருத்தி பீடத்தின் மேல் மட்டம்வரை கொண்டு வந்து அதன் மீது பிரம்ம சிலா என்ற கல்மேடை கொண்டு மூடுவார்கள். இந்த மேடை மீதுதான் தெய்வச் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
இவை போன்ற நடைமுறை கோயில் நிர்மாண விதிகளில் முக்கியமானவை. எதிர்கால சந்ததியினரில்
யாரேனும் ஒரு பக்தர் கீரப்பாக்கம் மலைக்கு வந்து
இங்கு இருக்கும் பெருமாள் எப்படி எழுந்தருளினான் எனக்கேட்பார்களேயானால், அவர்கள் தெரிந்துகொள்ள இதோ இந்தத் தகவலை இணைத்திருக்கிறேன்.
இந்த மாதிரியான எந்த சடங்குகளும் அங்கே நிகழ்த்தப்படவில்லை; நிலத்தைப்
புனிதப்படுத்தவில்லை. ஆதார சிலாவையோ. பிரம்ம சிலாவையோ அமைக்கவில்லை. இவற்றை செய்யக்கூடாது
என்பதற்காக அல்ல, கடவுள் எந்த ஒன்றையும் ஏற்று அருள்
பாலிப்பான் என்ற தீவிர நம்பிக்கையால் மனம்
போன போக்கில் இதை உருவாக்கினேன்.
நாராயணனை வேதத்தாலும் எட்டமுடியாதவன் என்பார்கள், தவத்தாலும், யோகத்தாலும் அடைய முடியாதவன், ஞானிகளும் ரிஷிகளும்
யுகக்கணக்கில் தவம் செய்தும் கிடைத்தற்கு அரியவன் என்று கூறுவார்கள்.
அதே நேரத்தில் அவன் எளியவர்க்கு எளியவன்; சரணடைந்தோரின் புகலிடம். எதை விரும்பினாலும் அதை
நிறைவேற்றித்தருகிறவன். குழந்தைகள் கூப்பிட்டால் பதில் அளிக்க தூணிலும் துரும்பிலும் நின்றவன், சபரி என்கிற வேடுவக் கிழவி
கடித்து சுவைத்த கனியை ருசித்து சாப்பிட்டவன்,
காட்டிலேயே கிடந்து வாழும் பறவைகள், குரங்குகள் என முதிரா அறிவுடைய ஜீவர்களின் தோழனாக விளங்கியவன், பால் நாற்றம் வீசுகிற, படிப்பறிவற்ற இடைப் பெண்களின் பானைகளில் வெண்ணெய்த் திருடி உண்டு அவர்களின் பிள்ளைகளாக வாழ்பவன், பக்தி செய்தாலும், செய்யாமல் போனாலும் இதயங்களில் உறைபவன், எப்போதும் பக்தனின் பிடியில்
இருப்பவன். எல்லாவற்றுக்கும் மேலாக பக்த நாம ஜெபம் செய்பவன். இத்தகைய பரமனை அழைத்த
பாமரனாகிய அடியேனின் அழைப்பை ஏற்று
இங்கே எழுந்தருளினான்.
எளிய பக்தர்களின் சின்ன வேண்டுதலுக்கு உருகி அவர்களைத் தேடி ஓடிவந்துவிடுவான் என்கிற உண்மை இங்கே
வெளிப்பட்டது என்பதை யாவரும் புரிந்துகொள்ளும்
வண்ணம்பெருமாள் வந்தான்.
பிரதிமை திதி ஆரம்பித்தவுடன்தான் அவன் மலை மீது கம்பீமாக வந்து நின்றான். கண் விழித்து பால் கறக்கும்
பசுவையும் கன்றையும்பார்த்தான். பாமர மக்கள் பூசை செய்ததை ஏற்றுக்கொண்டு, வானர சேனைகள் அழைத்துச்செல்ல ஊர்வலம் போன ராமனைப் போல பாமர சேனை புடை சூழ மலைமேல் ஏறினான்.
வேதமந்திரங்கள் இல்லாமல் கோவிந்தா, நாராயணா, கேசவா, ஸ்ரீராமா என்ற நாம
கோஷங்களையே மந்திரங்களாக ஏற்று, பீடத்தின் மீது ஏறி நின்றான்.
இந்தக் காட்சி, வானர சேனைகள் ஒன்று சேர்ந்து
ஸ்ரீராமரைத் தூக்கி வந்து சிம்மாசனத்தில் ஏற்றி வைத்தது போன்றிருந்தது. இது போன்ற காட்சியை உலகில் வேறு எங்கும் கண்டிருக்கவே முடியாது.
பீடத்தின் அடியில் போடப்பட்ட நாணயங்கள் அனைத்தும் ராஜ கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்தவரும்,
பெருங்களத்தூர்
பிரார்த்தனை மையத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவரும் ஆகியதெய்வத்திரு ராஜலட்சுமி
அம்மா அவர்கள் அரை நூற்றாண்டு காலமாக
சேமித்து வைத்த நாணயங்கள்.
எந்தக் கோயில் அமைத்தாலும் இந்த எளிய பக்தையின் நினைவாக அந்த மூர்த்தியின் பாதங்களுக்கு அடியில் இதைச் சேர்ப்பித்து
விடுங்கள் எனக் கூறி எங்களிடம் அவர்
ஒப்படைத்த நாணயங்கள் பெருமாள்
பாதத்தின் கீழ் உள்ளன. யாக சாலைகள் அங்கே வந்த
பக்தர்களின் இதயங்கள், முளையிடப்பட வேண்டிய
தானியங்கள் அந்த பக்தர்களின் இதயத்தில் எழுந்த பக்தி உணர்வு. இப்படி எதையோ எதற்கு இணையாக்கி
எழுந்தருளினான்.
கனிகண்ணனுக்காக ஓர் இரவு எழுந்தருளிய இறைவன் இந்தக் கடையனுக்காக ஒரு மண்டலத்திற்கும் மேல் நின்று, எனது பக்திக்கு சான்று பகர்ந்தான். இனி என்ன வேண்டியிருக்கிறது.
என்னுடைய சாயிபாபா, பெருமாளாக மலை ஏறி நின்றதுவும்
மகிழ்ச்சியே. இந்த வடிவில் வந்த அவன் தனது சொந்த
வடிவிலும் வருவான்.
ராமருக்குப் பின்னால் அணிலும் இருந்து உதவியதாகச் சொல்வார்கள். இந்த அணிலுக்குப்பின்னால் சாயிராமன் இருந்தான்
என்பதற்குச்சான்று இந்த மலையப்பன்.
என்னோடு வழக்கம் போலத் தோள் கொடுத்து நால்வர் கூட்டணியாகி உழைக்கின்ற ஸ்ரீதரன்,வேணுகோபால், ஆறுமுகம் ஆகியவர்களோடு ரவிசங்கரும் இணைந்து ஐவராகி சேவை சாதித்தோம். அனைத்தையும்
விட்டுவந்து எங்களோடு ஐக் கியமாகி வயது மூப்பையும்
பொருட்படுத்தாமல் இறைசேவைக்காக வந்துவிட்ட
அப்பர் பெருமான் சம்பந்தம் அவர்களோடு ஆறாகி,
சுவாமியோடு ஏழாகினோம்.
அரவாக்கம் சுதாகர் ரெட்டி அவர்களை தரிசனம் செய்யச் சென்றிருந்தபோது, அவர்வீட்டின் எதிரே ஒரு சிறிய பஜனைக் கோயில் கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. அதைப் பற்றி கேட்டபோது 1967-ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப் பட்ட இந்த சிறிய கோயில் எதன் காரணமோ அப்படியே
நிறுத்தப்பட்டது. அரை நூற்றாண்டு நெருங்கும்
நிலையிலும் அப்படியே கிடக்கிறது என்றார்கள்.
உண்மையாகவே பெருமாள்- சிவாலயத்தை எடுத்து கட்டி முடிப்பது மிகப் பெரிய சேவை. எளிதில் முடியாதது. ஆனால் அடியேனையும், அடியேனுடன் இணைந்த
தங்களையும் நம்பிரான் விரும்பி இந்த ஆலயத்தை
எழுப்பிக் கொண்டுஉள்ளான் என்பது சிலிர்க்கிற அனுபவம்.
இந்த சேவைக்காக துரும்பளவு உதவி செய்து சேவை தொடரக் காரணமாக இருந்த எல்லா பக்தர்களையும் நான் நன்றியோடு நினைக்கிறேன். விக்னராஜனாக, விதிமுறைகளைத் தாண்டி வரதராஜனுக்கு அருள்
புரிவதற்காக மலை வந்த பெருமாள் இவர்களுக்கு
புண்ணியம் ஆயிரம் கோடியைத் தரட்டும். செய்தவருக்குத்
துணை யிருக்கட்டும். இனியும்
இச்சேவைக்காக தோள் கொடுக்கும் யாவருக்கும்
துணையிருந்து காப்பான் என உறுதியளித்து
வணங்குகிறேன்.
ஒரு பூவை - பழத்தை வைத்து வணங்கு, முடியாவிட்டால் ஓர் இலையை எனக்குத் தா. அதுவும்
முடியாவிட்டால் சிறிது தண்ணீரைத்தந்தால்போதும் நான் திருப்தி கொள்கிறேன் என்ற இறைவன் அதைக்கூட எதிர்பாராமல்இந்த மலையில் வெளியில்-
வெயிலில் பக்த ஜனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.
கோயில் அமையக் காரணமான நாமெல்லாம் ஒரு காலத்தில் காணாமல் போய்விடுவோம். ஆனால் இறைவன் காலம்
காலமாக இங்கு வீற்றிருந்து நம் பக்திக்கு
சான்று பகர்வான்.
இந்த தர்ம சேவையில் பங்கு பெற்று சாயி அருளோடும் அனுக்கிரகத்தோடும் வாழ்வாங்கு வாழ்வீர்களாக.
- ஸ்ரீ சாயி வரதராஜன்
No comments:
Post a Comment