நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Saturday, 14 May 2016

கீரப்பாக்கம் குபேர ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதியில் ராமநவமித் திருவிழா


கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்கு மேல் பகுதியில் மலையில் அமைந்துள்ள குபேர ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதியில் முதன் முதலாக ராமநவமித் திருவிழா நடைபெற்றது. அன்றைய தினமே பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திலும் ராம ஜெயந்தி சிறப்பாக நடைபெற்றது.
காலை வேளையில் யாருமே நிகழ்ச்சிக்கு வரவில்லை. திகைப்பாக இருந்தது. அன்ன தானத்திற்கு சொல்லியாகிவிட்டது, விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது; ஆட்களை காணவில்லையே என்ற திகைப்பு ஏற்பட்டது.
உன்னால் எதையும் செய்யமுடியாது, எதுவுமே நடக்காது என்ற நிலையில் திகைத்து விடாதே! கலக்கம் கொள்ளாதே! நான் உன் கடவுள். பேசாமல் நாமஜெபம் செய்என்ற குரல் உள்ளத்தின் உள்ளிருந்து ஒலிக்க ஆரம்பித்தது.
பேசாமல் அமர்ந்து நாமஜெபம் செய்து கொண்டிருந்தேன். பெருங்களத்தூர் பாபா ஆலயத்திற்கு வந்தபோதும் அமர்ந்து நாமஜெபம் செய்தேன்.
சிறிது நேரத்தில் குமார் வந்தார், சிவக்குமார் வந்தார். கீரப்பாக்கம் போக வண்டலூர் வரைச்சென்றிருந்த பாலு பானுமதி தம்பதியர் மீரா அம்மாவுடனும் சசியுடனும் வந்தார்கள். அதன் பின் ஹோமத்தில் கலந்துகொண்ட பக்தர்களுடன் சேர்ந்து சாயிநாம ஜெபம் செய்தேன்.
உங்களுடைய வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிற நிலைமை உண்டாகலாம், ஆனால் மனம் தளரக்கூடாது. நிலைமை கைவிட்டுப் போனது போலிருக்கலாம், சோர்ந்து விடக் கூடாது. பாபா நம் கடவுள்; அவர் பார்த்துக்கொள்வார். இதை அனுபவமாகத் தருவார் எனப் பிரசங்கம் செய்துவிட்டு, குமாரை அழைத்துக்கொண்டு கீரப்பாக்கம் கிளம்பினேன்.
ஆவடியிலிருந்து சீதா அம்மா, ஜோதி மற்றும் குழந்தைகள் வந்திருந்தார்கள். காலை ஏழு மணிக்கே வந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.
கீரப்பாக்கம் தலைவர் ஹரிகிருஷ்ணன், செயல் அலுவலர் நீலமேகம், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னதாக வந்து காத்துக் கொண்டிருந்தனர். ரமா அம்மாவும் அவருடைய சகாக்களும் வந்தார்கள்.
குமாரை அழைத்து சுவாமிக்கு திருமஞ்சனம் செய்துவைக்குமாறு கூறினேன். அவர் உடனடியாக அபிஷேக அலங்காரம் செய்யும் சேவையில் ஈடுபட்டார்.
பக்தர்கள் பெருமாளுக்கு பாத அபிஷேகம் செய்யும் வைபவத்தை தலைவர் ஹரிகிருஷ்ணன் துவங்கி வைக்க, ஒவ்வொருவராக வரிசையில் வந்து அபிஷேகம் செய்தார்கள். பெரியவர் சம்பந்தம், ரவிசங்கர் ஆகியோர் வருகிற கூட்டத்தைசரிப்படுத்தி பூஜைகள் சரிவர நடக்க உதவினர்.
கீரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் டாக்டர் ஹரி கிருஷ்ணன் இராம நவமி பூஜையைத் துவக்கி வைத்தார். கூடுவாஞ்சேரி சாந்தி அம்மையாரும் அவரது சகோதரர் வண்டலூர் நெடுஞ்செழியனும் அன்னதானம் செய்தார்கள். குரோம் பேட்டை ரமா அம்மையார் பூஜைக்கான செலவினங்களை ஏற்றுக்கொண்டார்.
குழந்தைப் பேறுக்காக வந்தவர்களுக்கு ராமரின் பிரசாதத்தை வழங்கி ஆசிர்வதித்து கூட்டத்திற்கு வழிவிட்டேன். எங்கிருந்து இவ்வளவு மக்கள் கூட்டம் வந்தது எனத் தெரியாத அளவுக்கு மக்கள் கூடினர்.
அதற்குள் கீரப்பாக்கத்தில் உள்ள நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட லிங்கம் உள்ள தலம், கிராம தேவியான செல்லியம்மன் ஆலயம், அரண்மனை மேடு, நடுக்கல் போன்றவற்றை தரிசனம் செய்ய பஞ்சாயத்தாருடன் சென்றிருந்தேன். பழைய அரண்மனை சிதைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த தேவி ஆலயம் முற்றிலும் அழிக்கப்பட்டு, சிலையின் அடிப்பாகம் மட்டும் சிதைந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
முஸ்லிம் படையெடுப்பின் காரணமாக இது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆய்வுக்குப் பிறகு விஷயங்கள் தெரியவரும். இந்த இடத்தில் சிவஆலயம் ஒன்றை கட்டித் தருமாறு தலைவர் நம்மிடம் கேட்டுக்கொண்டார். நாமும் சரி என ஒப்புக்கொண்டோம்.
இவற்றை பார்வையிட்டு, ஆரத்தி நேரத்தில் ஆலயம் வந்தேன். மலையில் வழங்கப்பட்ட அன்னதானம் தேவப்பிரசாதமாக இருந்தது.
அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டுச் சென்றார்கள். இதை பிரேமா அம்மா, ஆறுமுகம், ஸ்ரீதரன் குழுவினர் செய்து தந்தனர்.  அன்னதானம் கீரப்பாக்கம் கோயிலில் மாலைஐந்து மணிவரை தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பெருங்களத்தூரிலும் மாலை நேரத்தில் சாயி பக்தர் கூட்டம் பெரிய அளவில் திரண்டிருந்தது. அப்போதுதான் பாபா சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. திகையாதே, கலங்காதே, நான் உன் கடவுள். நாம ஜெபம் செய்”, உங்களுக்கும் இதையே கூறுகிறேன்.
பிரச்சினை பெரிதாகும்போதும், கைவிட்டுப்போகும் நிலையில் உள்ள போதும், திக்குத்தெரியாமல் நிற்கிறோம் என்ற சூழ்நிலையின் போதும் அவற்றை எதிர்கொள்ள நாம ஜெபம் செய்யுங்கள்; மீதியை பாபா பார்த்துக் கொள்வார்.

No comments:

Post a Comment