நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Wednesday, 14 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 2

இது அந்தக் காலத்து ஜமீன் சொத்து.. வனத்துறை எல்லை முடிந்து, இது இந்த ஊர் மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அனுபவித்து வருகிற பகுதியாக உள்ளது. அவர்களிடம் விசாரிக்கலாம், தந்தால் கோயில் அமைக்கலாம் என்றார்.
கார்த்திக் தனது மாமா பாபு என்பவரிடம் அழைத்துச்சென்றார். அவர் தனது ஊர்க்காரர்களிடம் பேசி, இந்த இடத்தை பெற்றுத் தந்தார்.
இங்கு பாபாவுக்கு கோயில் போன்ற அமைப்புகளை நிறுவ, தலைவரின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும் என இரவு முழுவதும் ஏதோ ஓர் உந்துதல் என் மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் கார்த்திக்கிடம் இது பற்றி தெரிவித்து, அவருடன் தலைவரைப் போய்ப் பார்த்தேன்.
அந்தத் தலைவர் பெயர் ஹரிகிருஷ்ணன். ஓர் அரசியல்வாதிக்கு உரிய எந்த பகட்டும், பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தார்.
தலைவர் பொறுப்பு வரும் போகும்.. இது நிரந்தரம் அல்ல. ஆனால், இந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்து அவர்கள் மனதில் நிற்கவேண்டும். எனக்குப் பிறகும் என் பெயரை இந்த மக்கள் நினைக்கவேண்டும் என நினைக்கிறவன் நான். கடவுள் எனக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார். இந்த ஊர் மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற வேட்கையில் சேவை செய்கிறேன்.. என்ற அவர், நானும் சாயி பக்தன் தான்.. பாபாவுக்கு மலையில் கோயில் அமைக்க முயற்சி செய்தேன்.. ஏனோ முடியவில்லை என்றார்.
சிறிது நேரம் யோசித்து, அந்தப் பணியை நான் எடுத்துச் செய்ய ஆட்சேபனையில்லையே- எனக்கேட்டேன்.
நிச்சயமாக இல்லை. ஊர் மக்களிடம் பேசி அனுமதி பெற்றுத் தருகிறேன். வேறு ஏதேனும் பார்மாலிட்டி இருந்தால் முடித்துக்கொண்டு கட்டுங்கள். நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்றார்.
அவருடன் சென்றபோது, நீலமேகம், வெங்கட்ராமன் போன்ற ஊர்ப் பெரியவர்கள் இந்த ஊரில் பாபா வந்தால் பெருமைக்குரிய விக்ஷயமாக இருக்கும். அதற்கு ஒத்துழைப்பு தருகிறோம் என்றார்கள்.
ஊர் மக்கள் நல்லவர்கள்.. ஊர்த் தலைவரும் நல்லவராக இருக்கிறார். எனவே, இந்த ஊரை பாபா தேர்வு செய்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.
பாபா, இந்த நல்ல ஊரில் கால் எடுத்து வைக்கிற நேரம் அனைவரும் சுபீட்சமானவர்களாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தலைவருடன் அந்த மலையைப் பார்வையிடச் சென்றேன்.
மலை முழுவதும் கள்ளி முள். நடக்க முடியுமா? என மனதுக்குள் கேட்டபோது, ஒருவரது செல்போனில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. ஏற்றிவிடப்பா.. தூக்கிவிடப்பா என்ற ஐயப்பன் பாடல் ஒலித்தது.
சற்று நேரத்தில்.. ஓர் ஒலிப் பெருக்கியில், கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? என்ற பாடல் ஒலிபரப்பானது..
அது கீரப்பாக்கம் மலைதானோ- நல்ல சகுனமாக இருக்கிறதே என நினைத்தபடி மலை ஏறினேன்.

எல்லாம் மங்களகரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கீரப்பாக்கத்திற்குச் சென்றால், அனைத்து பிரச்சினைகளும் கிள்ளுக்கீரைகள் போல கிள்ளப்படும் என பாபா மாஸ்டர் இதைப் பார்வையிட்டு வாழ்த்தினார். அனுபூதி சித்தர் இந்த இடத்தை ஆசீர்வதித்தார். காசிலி சுவாமிகள் வந்து இந்த ஊர் உலகப் புகழ் பெற்றதாக மாறும் என்றார்.

தொடரும்

Tuesday, 13 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 1

சீரடி கிராம மக்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்களோ, அவர்களுக்கு இணையானவர்கள் கீரப்பாக்கம் கிராம மக்கள்.
இந்த ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமையப் போகிறது என்பது நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒன்று. அதேபோல, கோயில் அமைவதற்கு முன்னதாகவே பாபாவுக்காக மூன்று சிலைகள் தயார் நிலையில் இருக்கின்றன.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த கிராமத்திற்கும் பாபாவுக்கும் பூர்வ ஜென்ம வாசனை நிச்சயமாக உண்டு என அடித்துக் கூறமுடியும்.
கோயில் கட்டிவிட்டு, சிலை வைக்க முடியாத நிலையுள்ள இடங்களைப் பார்த்திருக்கிறோம். சிலை வாங்கிவிட்டு, கோயில் கட்ட இடமின்றி தவிக்கும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், இங்கே எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. எடுத்துச் செய்கிற வசதி உள்ளவர்கள் குறைவு என்பதைத் தவிர. இந்த ஊர் மக்களும், ஊரை ஆளுகின்ற தலைவரும், அவரது மன்ற உறுப்பினர்களும், ஆலோசகரும் கூட தெய்வ பக்தி மிக்கவர்கள். இவர்களின் ஒற்றுமை உணர்வுக்கு இறைவன் இரக்கம் காட்டுகிறான்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். கால்நடைகள் கூட, இந்தப் பக்கம் வந்து ஆலயம் தோன்றவுள்ள இடத்தில் கூடி நின்று பிறகு செல்கின்றன. இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை என்கிறார்கள் அவ்வூர்க்காரர்கள்.
நினைத்ததற்கு மேலாக பணிகள் நடந்து வருகின்றன. பாபா நடத்திக் கொள்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
கோயில் கட்ட வேண்டும் என பாபா உங்கள் கனவில் வந்து சொன்னாரா? என கேட்கிறார்கள்.
நிச்சயமாக பாபா கனவில் வந்து இங்கு கோயில் கட்டச்சொல்லவில்லை. வாழ்நாளில் என் பங்களிப்பை இச்சமூகத்திற்குச்செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வு முன்னோக்கித் தள்ளுவதாலும், சமதர்மத்தை நிலை நிறுத்தும் சாயி கோட்பாடு பரவவும் கோயில் கட்ட முனைகிறேன்.
பெருங்களத்தூரைச் சுற்றிலும் பாபாவுக்கு கோயில்கள் அமைக்கவே தணியாத ஆசை. ஆனால், இங்கு இடமதிப்பு நாளுக்கு நாள் அதிகமாவதால், என்னால் இடத்தை வாங்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் ஒரு பெரியவர் நண்பகல் வேளையில் கோயிலுக்கு பாபாவை தரிசிக்க வந்து, பேசிக்கொண்டிருந்தார். அவர் அவ்வளவு படித்தவராகத் தெரியவில்லை. ஆனால் எனது எழுத்துக்களை, சேவையை வெகுவாகப் புகழ்ந்தார்.
தற்கொலை செய்துகொள்ளப் போகிறவன்கூட உனது புத்தகத்தைப் படித்து மறுவாழ்வு அடைகிறான். பலரது வாழ்க்கை உன்னால் திரும்பத் தரப்படுகிறது. அப்படிப் பட்ட சக்தியை பாபா உனக்குக் கொடுத்திருக்கிறார், ஆனால் நீ பாபாவுக்கு ஒரே இடத்தில் இங்கு கோயில் அமைத்திருக்கிறாய்.. நான்கு திசைகளிலும் அவரை உட்கார வைக்கவேண்டும். அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என பாபா எதிர்பார்க்கிறார் என்பது போல பேசிவிட்டுச் சென்றார்.
இடம் எங்கே மலிவாகக் கிடைக்கும் எனக்கேட்டபோது, கூடுவாஞ்சேரியின் உள்ளே சென்றால், பெருமாட்டு நல்லு}ர் என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று கேளுங்கள், அதன் சுற்றுப்புறத்தில் கேளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில்தான் கார்த்திக் என்ற தம்பி நமது கோயிலுக்கு வந்தார். வழக்கமாக வருகிற அவர், ஏதோ பிரச்சினையின் காரணமாக, பல மாதங்களாக வரவில்லை. அவரை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்திருந்தேன். இதனால் அவரிடம் இடம் பற்றி விசாரித்தேன்.

அந்தத் தம்பியோடு, கீரப்பாக்கம் வழியாக வந்தபோது, இந்த மலை அடிவாரத்தைப் பார்த்து, அழகான பகுதியாக இருக்கிறது.. இங்கு பாபாவுக்கு கோயில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.. ஆனால் இது வனத்துறையிடம் இருந்தால் அவ்வாறு செய்ய இயலாதே எனத் தெரிவித்தேன்.

தொடரும்

Tuesday, 6 May 2014

கீரப்பாக்கம் கோயில்

கீரப்பாக்கம் கொத்து மலைக் குன்றில் பாபாவின் 58 உயர அடி சிமெண்டு சிலை அமைப்பதற்கு உத்தேச மதிப்பீடாக பதினைந்து லட்ச  ரூபாய் ஸ்தபதியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரையிலிருந்து குன்றின் மீது சாலை அமைக்க ஆகும் செலவு சுமார் ஐந்து லட்ச ரூபாய்.
மலைக் கோயிலின் கருவறை பதினாறு அடிக்கு பதினாறு அடி. முன்மண்டபம் நாற்பதுக்கு அறுபது அடி என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடிவாரத்தில் விநாயகர் ஆலயம் அமைக்க சுமார் ஏழு லட்ச ரூபாய்.
அன்னதானக் கூடம் அமைக்க சுமார் பன்னிரண்டு லட்ச  ரூபாய்.
போர்வெல் அமைப்பவதற்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய்.
மலை அடிவாரத்தில் அமையவுள்ள கோயிலும் ஏறக்குறைய இதே செலவில்தான் அமைகிறது.
பங்களிப்பை அளிக்க விரும்புவோர், பொருட்களாக கொடுத்துவிட்டால் வேலை எளிதாக முடியும். சிரமமும் மிஞ்சும்.
பரிகார தெய்வ சிலைகள் மற்றும் வேறு வித நலத்திட்டங்களில் ஆர்வம் உள்ளவர்கள்  நமது பிரார்த்தனை மையத்தை அணுகலாம்.
மேல் விபரங்கட்கும், நன்கொடைகள் அனுப்பவும்
  SHIRDI SAI SAMADHARMA SAMAJ
3E/A. SECOND STREET, BUDDHAR NAGAR, NEWPERUNGALATHUR,
CHENNAI- 600 063/ TAMILNADU, SOUTH INDIA. Ph: 9841203311
SYNDICATE BANK, PERUNGALATHUR BRANCH

A/C NO: 61152200042231 (IFSC CODE: SYNB 0006115)

புது வீடு வாங்க, கட்ட சாயி மந்திரம்!

ஆளுக்கொரு செங்கல்....அதுவே நாம் சாயியிக்கு செய்யும் கைமாறு...அவரை உச்சியில் அமர்த்தி நாம் அவரது பாதத்தினை சேவிப்போமாக.

வீடு கட்ட முடியவில்லை, வீடு கைவிட்டுப்போகிறது என்று கலங்குவோர் இனி கவலைப்படவேண்டியதில்லை. ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக்கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.

சாயி பக்தர்கள், சாயி ராம் என எழுதி அதை பாபா ஆலயம் மைக்கக்கொடுத்தால் இதே பலன் கிட்டும். மிகப் பெரிய பாபா ஆலயம் வண்டலூர் -  கேளம்பாக்கம் சாலையில் கண்டிகையின் உட்புறம் கீரப்பாக்கம் என்ற இடத்தில் அமைகிறது. நீங்கள் இங்கே செங்கற்களை வாங்கி அதில் சாயி நாமம் எழுதிக் கொடுத்து, பலன் பெறலாம்.

பாபாவிற்குச் செய்கிற சேவை!

பாபாவின் அற்புதங்களை யாராலும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. உணர்வினால் மட்டுமே அனுபவித்து மகிழ்கிற நிலை அது. இந்த அற்புதங்களை நான் கூறப்போகிறேன் என்பது மணலை கயிறாகத் திரிக்க முற்படுகிற செயலைப் போன்றது.
இந்த பரவச அனுபவத்தை அனுபவித்த ஆயிரமாயிரம் மக்கள் இன்று பாபாவின் அடிமைகளாக சேவை சாதித்துக் கொண்டிருக்கிறhர்கள். அவர் மேலுள்ள பக்தி, எந்த இழப்புகளையும் தாங்கவும், எதிர்ப்புகளைத் தாண்டவும், கடன் சுமைகளை மீறி வாழவும் தைரியத்தை நமக்குத் தந்துகொண்டிருக்கின்றன.
இந்தப் பரவச உணர்வுகள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். இதை மற்றவர்களும் அனுபவிக்க  வேண்டுமானால், பாபாவுக்கு அவர்களை அறிமுகப்படுத்துங்கள். பிறருக்காக வேண்டுதல் செய்யுங்கள். பாபாவின் போட்டோக்கள் அல்லது சிலைகளை வாங்கி அன்பளிப்பு செய்யுங்கள்.
உங்கள் ஆசியுடன் இப்போது புதிய பாபா ஆலயம் மற்றும் அன்னதானக் கூடம் ஆகியவை கீரப்பாக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
பணத்தை சேர்த்து வைத்து இஞ்சினியரிடம் தந்தால் அழகாகக்கட்டித் தருவார் என ஆலோசனையாகத்தெரிவித்தார்கள்.
பணம் சேர்க்கிற நிலையிலிருந்தால் இப்போது பக்கத்திலுள்ள இடமே விலைக்கு வருகிறது.. வாங்கிவிடுவேன். அந்த நிலையில்லாததால் அன்றன்றைக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து பணிகளை பாபா நடத்த வைக்கிறார்
இடையிடையே பிரச்சினைகளும் வரத்தான் செய்கின்றன. அவற்றைத் தாண்டி இந்த விக்ஷயங்கள் நடக்கின்றன. வயதாவதால் ஒவ்வொரு நாளும் உடல் சோர்வு அடைகிறது, பாபா மீதுள்ள பக்தி பரவசப்படுத்துவதால் மனம் துடிப்பாகி செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால் தடைகளைத் தாண்டி ஆலயப் பணிகள் நடக்கின்றன.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... இது சாயி வரதராஜன் கட்டுகிற கோயில் அல்ல. சாயி பக்தர்கள் கட்டுகிற கோயில். நீங்கள் வாங்கி அனுப்புகிற ஒவ்வொரு பொருளும் நீங்களாக அல்ல, பாபாவின் தூண்டுதலால் உங்கள் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்த கோயில் பணிகளில் நீங்கள் செய்கிற கைங்கர்யம் உங்கள் பாவங்களை விலக்கி, புண்ணியங்களைச் சேர்த்து தலைமுறையை நன்றாக வாழச் செய்யும்.
நன்றாக வாழ, இன்றேனும் பிரார்த்தனை செய்யுங்கள். என்றேனும் அவரது திருப்பணிக்கு உதவி செய்யுங்கள். சாயிதரிசனம் பத்திரிகையை விலை கொடுத்து வாங்கிப்படிப்பதும், சந்தாவை புதுப்பித்துக் கொள்வதும், பிறருக்காக நாம் சந்தா தொகை செலுத்தி பத்திரிகையை பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் கூட அவருக்குச் செய்கிற சேவையே அன்புடன்

சாயி வரதராஜன்

Saturday, 3 May 2014

காசிலி முதல் கீரப்பாக்கம் வரை


சீரடியிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள குக்கிராமமான காசிலி என்ற ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமைத்துத் தனிமையில் வாழ்ந்து வரும் பிரம்மச்சாரி சுப்பிரமண்யம் சுவாமிகள்.
தமிழகம் பூர்வீகமானாலும் மகாராஷ்டிர மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அங்கே ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகிறார்.
சுமார் இரண்டரை லட்சம் மகாலட்சுமி யாகம் நடத்தியவர். பாபாவின் அருளை முழுமையாகப் பெற்றவர். இவர் ஒரு தமிழர் என்பதால், அந்த மாநிலத்தில் இவருக்கு எதிரான பல தொல்லைகள் அவ்வப்போது தரப்பட்டு வந்தன. இவற்றையெல்லாம் பாபா அருளால் வென்று வந்தவர்.
தேள், பாம்பு போன்றவை கடித்து யாரேனும் வந்தால், அவர்கள் உடலிலுள்ள விஷத்தை தன் உடலில் ஏற்றி அதை சரி செய்யும் சக்தி இவரிடம் உண்டு. இவருடைய ஆன்மீக சக்தியை மக்கள் பெற்றுக்கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில் இவர் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
அதற்கேற்ப, ஏழைகள் முதல் செல்வந்தர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் வரையில் இவரை காசிலிகாவோன் சென்று தரிசித்து வந்தார்கள்.
காசிலிகாவோன் சென்று அவரை தரிசிக்க முடியாத சாயி பக்தர்கள், எப்படியேனும் அவரை தரிசித்து விட வேண்டும் என்பதற்காக, அவரது வருகை பற்றி விசாரித்த வண்ணம் இருந்தார்கள்.
டிசம்பர் 29ம் நாள் சென்னைக்கு இவரை வரவேற்பதற்காக மிகப் பெரிய அளவில் _ சாயிதரிசனம் சார்பில் போஸ்டர்கள், பேனர்கள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

28ம் நாள் மாலையில் சாலிகிராமத்தில் உள்ள தோத்தாத்ரி அவர்களின் பார்வதி பவன் ஓட்டலில் நடந்த மாபெரும் பஜன் மற்றும் பக்தி மேளாவில் கலந்துகொண்டார்.
மறுநாள் காலை கீரப்பாக்கத்தில் பாபா கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டவர், தொடர்ந்து பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் மாலை ஏழு மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு, நங்க நல்லூரில் சாயிபக்தர்கள் அழைத்துச் சென்று ஆசி பெற்றார்கள்.
அன்றிரவு சாயி வரதராஜன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்த சுவாமிகள், மறுநாள் திருவண்ணாமலை - தெள்ளாறு பாபா ஆலயத்திலிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
நாமக்கல்லில் பாபா ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டதோடு, திருச்சி போன்ற இடங்களிலும் ஆசி வழங்கினார்.
இவரை பல மாதங்களாக வற்புறுத்தி அழைத்த கும்பகோணம் சாயி பக்தர் ஜெயச்சந்திரன் அழைப்பை ஏற்று, அங்கும் விஜயம் செய்தார். வழியெங்கும் பயணித்த சுவாமிஜி, சொந்த ஊரான நாகர்கோயிலில் ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பி வரும்போதும் பக்தர்களை சந்தித்தார்.
நெய்வேலி சாயி பக்தர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து, வழியெங்கும் மலரால் பாதை அமைத்து வரவேற்று கவுரவித்து ஆசிபெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஊராகச் சென்று, திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து, தனது இருப்பிடம் சென்றிருக்கிறார் சுவாமிகள்.
சுவாமிகளின் வருகை சாயி பக்தர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்தப் பயணம் சுவாமிகளுக்கு பெரிய வெற்றி, அவரது வாழ்வில் திருப்பு முனை.
சுவாமிஜி நமது சங்கத்தில் இருந்தால் காசிலி தரிசனத்திற்காக கீரப்பாக்கம் – பெருங்களத்தூரில் இருந்து தனிப்பேருந்து இயக்கப்படும் என சாயி வரதராஜன் தெரிவித்திருக்கிறார்.
எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை, தனது ஆன்ம சக்தியால் வெளிப்படுத்தி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் சாயி வரதராஜன் என்று சுவாமிகள் நெகிழ்ச்சியோடு கூறியது சாயி தரிசனத்திற்குக் கிடைத்த வெற்றி.

சாயி வீரமணி

கிராம மக்கள் உதவியோடு உருவாகும் சாயிப்பேராலயம்

காஞ்சி மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கீரப்பாக்கம் மலைகள் சூழ்ந்த மலைக்கிராமம். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கண்டிகை என்ற கிராமத்திலிருந்து உட்புறமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஊர்.
இந்த ஊருக்கு அருகில் விளையாட்டுப்பல்கலைக்கழகம், யுனிடெக் நிறுவனம், காவலர் பயிற்சிக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உருவாக முக்கியக்காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ் காலத்தில் இருந்து இந்த ஊர் ஜமீன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு நிலஉச்சவரம்பு சட்டப்படி ஜமீன் சொத்து மக்களுக்கு உரியதாக மாறியது. இன்று ஜமீன் வாரிசுகள் சாதாரண குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது இந்த ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அவரது மகன் சந்துரு ஆகியோர் ஜமீன் வாரிசுகள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த ஊர் மக்களின் முக்கியத் தொழில் கல் உடைத்தல் மற்றும் விவசாயம். பின் தங்கிய மக்கள் வாழும் இந்த கிராமம், இன்று கல்வி மற்றும் பிற துறைகளில் முன்னேறியுள்ளது.
இந்த ஊர்க்குடிமக்கள் கிராமத்திற்கே உரிய பண்புகளான உபசரிப்பு, கபடு இல்லாத குணம், பிறருக்கு உதவும் பரோபகாரத் தன்மை போன்ற உயர் குணங்களைக் கொண்டவர்கள்.
இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக ஹரிக்கிருஷ்ணன் என்பவர் பதவி வகிக்கிறார். பதவி மோகமோ, பண ஆசையோ இல்லாமல் மிக எளிமையாக வாழ்க்கை நடத்துகிற இவர், அரசியல்வாதிகளில் ஆச்சரியப்படத்தக்க நபர். இவரை நமது சாயியுடன் சென்று சந்தித்த போது, ”இருக்கும்வரை பிறந்த ஊருக்கு ஏதேனும் நன்மை செய்துவிட்டுச் செல்ல வேண்டும். வேறு எதையும் நாம் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. பதவியை அதிகாரப் பொருளாகக் கருதாமல், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிற ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன்” என்றார்.
உயரிய குணம் உள்ள சாயி பக்தரான இவரது ஆட்சிக்காலத்தில் இந்த ஊரில் பாபா ஆலயம் அமைவதும், அதிலும் தனது பக்தன் ஆளுகிற இடத்தில் தனக்கென இடத்தைத் தீர்மானம் செய்து பாபா பெறுவதும் சிலிர்க்க வைக்கிறது
ஊர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் வேலை வாய்ப்பு, பொருளாதார சாயிப் பேராலயம் கிராம மக்கள் உதவியோடு உருவாகும் மேம்பாடு, இந்த ஊரின் பெயர் சிறந்து விளங்குதல் என ஊர் நன்மையைக் கருதி, உயர்ந்த லட்சியங்களோடு, பாபா ஆலயம் அமைய வழி வகை செய்துள்ளார் இவர்.

சீரடி குக்கிராமமாக இருந்தபோது, பாபா கூறியது போல, எதிர்காலத்தில் இந்த ஊர் பாபா பக்தர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் ஊராக மாறும் என்றும், மக்கள் திரள் திரளாக இந்த ஊரை நோக்கி ஆன்மிகப் பயணம் வருவார்கள் என்றும் சாயி வரதராஜன் கூறியபோது, காசிலி சுவாமி சாய் சக்தி சுப்ரமண்யம் அவர்களும், ”அப்படித்தான் ஆகும்” என்று வழி மொழிந்தார்.
பாபா மாஸ்டர் அருணாச்சலம், இந்த ஊரைப் பற்றி சொல்லும்போது, ”எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், இருந்தாலும் அவையெல்லாம் கிள்ளுக்கீரை போல கிள்ளப்படும் இடமாக இந்த இடம் மாறும். பாபாவின் ஆகர்ஷண சக்தி இந்த இடத்தில் அதிகமாக உள்ளதால், யாரெல்லாம் இந்தப் புனிதத் தலத்தில் தடம் பதிக்கிறார்களோ, அவர்களது வாழ்வில் திருப்பு முனை நிச்சயம் ஏற்படும்” என்றார்.
இங்கு ஏற்படப் போகும் சிறப்பு என்னவெனில், ஒரே ஊரில் இரண்டு இடங்களில் பாபா தொடர்பான ஆலய அமைப்புகள் உருவாவதுதான்.
சாயி வரதராஜன் இந்த இடத்தை தேர்வு செய்தபோது, நாங்கள் சென்று பார்த்தோம். இது சாயி வரதராஜன் அல்ல, அவருக்குள் இருந்து அவரை இயக்குகிற சாயி பாபா தேர்வு செய்த இடம் என்பது புரிந்தது.
மிகச் சிறிய இடமாக இருந்தாலும் தனது ஆன்ம பலத்தால் அதை உயர்த்துகிற சாயி வரதராஜன், தனது கடவுள் சாயி பாபாவின் ஆணைப்படியும், ஆசியுடனும் இந்த இடத்தைத் தேர்வு செய்திருப்பது, இன்றைக்கு அற்ப விஷயமாகத் தெரியும். காலப்போக்கில் அவரது தேர்வு மிகச்சரியானது என்பது புரிய வரும்.
மற்ற இடங்களில் பாபாவுக்கு ஆலயங்கள் எழும்பும். சாயிப் பேராலயம் என்பது கீரப்பாக்கத்தில் மட்டுமே இருக்கும்.
இது சாயி ஆலயம் அல்ல, சாயி பேராலயம் என தீர்க்கதரிசியான டாக்டர் கிருபளானி ஆசி வழங்கி வாழ்த்திய நினைவுகள் எனக்கு புதுத் தெம்பை தருகிறது..
பண பலம், படை பலம் இல்லாமல் ஆன்ம பலத்தையும், அதிலுள்ள ஆண்டவன் பலத்தை மட்டுமே நம்பி திருக் கோயில் உருவாக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளார் சாயி வரதராஜன்.
சாயி பாபாவை நேரில் தரிசிக்காதவர்கள், அவரது சேவையில் ஈடுபட்டு வரும் சாயி வரதராஜனை தரிசித்து அந்தக் குறையைப்போக்கிக் கொள்வதை நாம் அறிவோம். அந்தளவுக்கு மக்கள் மனதில் பக்தியை, நம்பிக்கையை வளர்த்து வாழ வைத்து வருகிறவர் அவர்.
மிக்சிறிய இடமான பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில், சாயி வரதராஜன் அவர்களின் பிரார்த்தனை மற்றும் வழிகாட்டுதலுடன் இன்று ஆயிரமாயிரம் மக்கள் புதிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார். இனி லட்சோப லட்ச மக்கள் நன்மை அடையப் போகிறார்கள்.
மலையில் கோயில் அமைவதற்குத் தடையற்ற சான்று, மாவட்ட ஆட்சியர் அனுமதி போன்ற காரணங்களுக்காகக்காத்திருக்கிறார்கள். விரைவில் பாபா ஆலய வரலாற்றிலும், தமிழகத்தின் மிக முக்கிய ஆலயங்கள் அமைந்த ஊர் வரிசையிலும் கீரப்பாக்கமும் இடம் பிடிக்கும். அந்தக் காலத்தைக்காண்பதற்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறார் நமது சாயி பாபா.
யாரும் ஏழைகள் இருக்கக்கூடாது, பசி பட்டினியோடு இருக்கக்கூடாது. அனைவரும் சமமாக, சம உரிமையுடன் வாழ பாடுபடுவதே உண்மையான சாயி பக்தர்களின் கடன். இதை நிறைவேற்றும் இடமாக மாறுகிறது இந்த கிராமம்.
                                                           சாயி வீரமணி