நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Friday 16 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 4

ஆலயம் கட்டும் இடத்தில் அவர்களை நிறுத்தி விசாரித்தேன். வேலூரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்ற சாயி பக்தர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவரை நான்கு பக்தர்கள் காரில் அழைத்து வந்தார்கள். நடக்க முடியாத இவரை காரிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
என்னிடம் உதியில்லை. தரையிலிருந்த புழுதி மண்ணை எடுத்து உதியாக அவருடைய உடலிலும் நெற்றியிலும் பூசி, பிரார்த்தனை செய்து அனுப்பினேன். அவருக்கு உடல் நலம் பெறவும், பேரணாம்பட்டுக்கு வேலை மாறுதல் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யச் சொன்னார். நீங்களும் வேண்டுங்கள்.
அத்தியாயம் 33 ல், கல்யாண் என்ற நகருக்குப்புறப்பட்டுச் சென்ற நானாவிடம், பாந்த்ரா வாசி ஒருவர், தன் மகள் பிளேக் நோயால் அவதிப்படுவதாக தெரிவித்தார். தாணே ரயில் நிலையத்தில் நானாவுக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உடனே சாலையிலிருந்த புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டார். சாலையில் நின்றவாறே சமர்த்த சாயீயை மன்றாடிப் பிரார்த்தித்து, புழுதி மண்ணை தம் மனைவியின் நெற்றியில் இட்டார். அங்கோ, அந்த பக்தரின் மகள் குணமடைய ஆரம்பித்தாள்.. என எழுதப்பட்டுள்ளது.
சாயியின் மகத்துவம் இப்படிப்பட்ட அற்புதம் நிறைந்தது என்பது உண்மையானால், நான் பிரார்த்தனை செய்து பூசிய புழுதி மண்ணும் நலம் அளிக்கட்டும் என பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனையை நீங்களும் அங்கீகரித்து பாபாவிடம் வேண்டுங்கள்.
இதுவரை இந்த ஆலயம் தொடர்பாக நடந்துள்ள விக்ஷயங்கள். இதற்கு மேல் நடக்கிற அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தலவரலாற்றுடன் சேர்க்கப்படும்.
எனக்குள் பாபா என்கிற பெரும் சக்தி குடி கொண்டு உள்ளது. அது உங்களுடைய கைங்கரியத்தை வைத்து தன்னுடைய வேலையை என்னை வைத்து வாங்கிக் கொள்கிறது. அவ்வளவே வேப்பமரமும் புற்றும் அமைந்துள்ள இடத்தில் வடக்கு நோக்கிய வாசல் அமைத்து பரிகாரக் கோயில் உருவாக்க ஓர் அளவை ஸ்தபதியிடம் குறித்து, கோயில் அமையும் இடத்தை அடையாளக் கோடிட்டு தந்தேன்.
12- 2 - 14 அன்று காலையில், கோயில் துவக்க ஹோமம் அனுபூதி சித்தரால் நடைபெற்றது. சாயி  ஸ்ரீதரன், ஆறுமுகம் -  மாலா தம்பதியர், வேணுகோபால் - லதா தம்பதியர், சாயி ஜெயச்சந்திரன், கலியன் -  சிவகாமி தம்பதியர், கார்த்திக் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். நான் தாமதமாக அவ்விடத்திற்கு வர நேரிட்டதுவந்து பார்த்தால், நான் அளவு குறித்த இடத்திற்கு மாறாக, வேறு இடத்தை ஸ்தபதி தேர்வு செய்திருந்தார். புற்று ஈசான்யத்தில் வருமாறு கோயில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்றார். சரி என ஒப்புக்கொண்டேன். ஜேசிபி மூலம் கடைக்கால் தோண்ட ஆரம்பித்தார்கள். வெறும் பாறையாக இருக்கிறது. தோண்ட முடியவில்லை என்றார்கள். வேறு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றேன்.
நான் அடையாளக் குறியிட்டுக் கொடுத்த இடத்தில் கடைக்கால் தோண்டச் சொன்னேன். அற்புதமாகத்தோண்ட முடிந்தது. இடத்தைத் தேர்வு செய்தது நானல்ல, பாபா என்பதை புரிந்துகொண்டேன். மற்றவர்களும் உணர்ந்தார்கள்.
அதே சமயம், எதிர்பார்க்காத பெரிய தடைகள் வந்தன. அந்தத் தடைகள் கீரப்பாக்கம் பகுதியில் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இந்த அற அமைப்பு மேற்கொண்ட செயல்பாடுகளை முடக்குவதாக அமைந்தது.
இறை பணி என்பது கடவுளுக்குச் செய்கிற சேவையல்ல. கடவுள் பெயரில் பொது மக்கள் நன்மைக்காக,  எதிர்கால சந்ததிக்காக செய்யப் படுகிற சேவை.
கோயில் போன்ற அற அமைப்புகளை நிறுவி செய்யப்படுகிற தொண்டு, பலதரப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்தத் தொண்டு செய்கிறவர்கள், செய்ய முன்வருவோர் ஆகியோரை பொதுமக்களும், அரசும், அரசுத் துறையும் ஊக்கு விக்க வேண்டும். சுயநலம் உள்ளவர்கள் மத்தியில் பொது நலம் காக்க நினைப்பவர்கள் சிலரே! இந்த வெகு சிலரையும் நாம் முடக்கிவிடக் கூடாது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அதைப் பற்றி  ………………………..

                                                                                                                                                      (தொடரும்)

Thursday 15 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 3

ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தபோது தான் புற்றும் வேப்ப மரமும் இருப்பது தெரிய வந்தது. அது ஆலயப் பணிக்கு அச்சாரம்.. இங்கே முதலில் சேவையைத் துவக்கு என பாபா மாஸ்டர் ஆணை பிறப்பித்தார்.
சாயி பக்தர்கள் பாபாவை பற்றிக்கொண்டால் போதும், சாயி பக்தர்களாக இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் ராகு -  கேது -  கால சர்ப்ப தோஷம் -  சனி தோக்ஷம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறவர்கள், கடன் பட்டு அவதிப்படுகிறவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் இப்படிப்பட்ட மக்கள் நன்மையுறுவதற்காக, அவர்களுக்கு பரிகாரத் தலங்களை இங்கே நிறுவி அவர்கள் நல் வாழ்வுக்கு உதவுங்கள் என டாக்டர் கிருபளானியும் தெரிவித்தார்.
எனது நண்பர்கள் ஆறுமுகம், _தரன், வேணுகோபால், கார்த்திக் ஆகியோருடன் ஆலய அமைப்பு உருவாக்க வேலைகளை பார்வையிட வந்தேன்.
இவர்களுடன் கீரப்பாக்கத்தில் இருந்தபோது, ஒரு கார் வருவதை கவனித்தேன். என்னைப் பார்த்ததும் கார் நின்றது. அதிலிருந்து நால்வர் இறங்கினார்கள்.
அவர்கள் சென்னை வேளச்சேரி, அன்னை இந்திரா நகரில் வசிக்கிற ரவிக்குமார், மோகனா தம்பதியர்.  தங்கள் குழந்தைகள் சந்தீப், பவித்ரா, மோகனாவின் தம்பி மகள் கணிதா ஆகியோர்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தைப் பார்க்க வந்ததாகச்சொன்னார்கள். அவர்களோடு கோயில் அமையவுள்ள கொத்து மலைக்குச் சென்றேன்.
கீரப்பாக்கம் சாயி பாபா ஆலய வரலாற்றில் முதன் முதலாக, என்னோடு மலை ஏறி மானசீகமாக பாபாவை தரிசனம் செய்தவர்கள் இந்தக் குடும்பத்தார். அது மட்டுமல்ல, பாபாவுக்கு முதல் நன்கொடை அளித்தவர்களும் இவர்கள்தான். பத்தாயிரம் ரூபாயை அதே இடத்தில் அளித்தார்கள். முதன் முதலாக இந்த ஆலயக் கூரை அமைப்பதற்காக சிமெண்டு சீட்டு வாங்க பதினைந்தாயிரம் ணுபாயை அளித்தவர்களும் இவர்கள் என்பது விசேஷம். அது மட்டுமல்ல, சாயியுடன் என்னையும் சேர்த்து இந்த இடத்தில் நமஸ்கரித்த முதல் பக்தர்களும் இவர்கள்தான்.
இந்தக் குடும்பத்தைப் பற்றிய விவரம் எதுவும் இந்தக் கட்டுரை எழுதும் காலம் வரையில் தெரியாதுஆனால், தேர்வு செய்து, இவர்களிடம் பாபா முதல் தட்சணை பெற்றதிலிருந்து இவர்கள் பாக்கியசாலிகள் என்பதும், இவர்கள் பாதம் இந்த இடத்தில் பட்டதையும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இடத்தைச் சீரமைக்க முதன் முதலாகப் பணம் கொடுத்தவர் சென்னை சாலிகிராமம் பார்வதி பவன் ஹோட்டல் அதிபர் தோத்தாத்ரி என்ற பெரியவர். முதல் செங்கல் லோடு அனுப்பியவர் ஆர்.கே.எஸ்.
முதல் பூஜை நடத்தியவர் அனுபூதி சித்தர். ஆலய அமைப்புக்கான முதல் அடித்தளம் அமைத்தவர் ரமேஷ் ஸ்தபதி. மலைக்கோயில் அமைய என்னோடு முதல் முயற்சி செய்ததோடு, எந்த உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என முதல் வாக்குறுதி அளித்தவர் சி. சண்முகம். முதல் பிரார்த்தனை வைத்தவர் பெயர் சங்கர மூர்த்தி என்ற ஆடிட்டர். இவர் ஒரிசாவில் ஐயப்பன் கோயில் கட்டியவர்.
பாபா விக்ரகத்தை முதன் முதலாக வாங்கித்தந்தவர் சென்னை ஆதம்பாக்கம் முனுசாமி என்ற பெரியவர். முதன் முதலாக பெருந்தொகையை நன்கொடையாக அளித்தவரும் இவர்தான்.
முதல் விக்கிரகத்திற்காக நான் கேட்டது சேலம் சதீஷ்.  முதல் கருங்கல் பாபா விக்ரமூம் அமைப்பவர் இவர். வெளியூரிலிருந்து முதல் நன்கொடை தந்தவர் சேலம் பிரேம்குமார் குடும்பத்தார். முதல் பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலையை தந்தவர்கள் பெருங்களத்தூர் முன்னாள் கவுன்சிலர் கே. எஸ். நடராஜன் மற்றும் அவரது நண்பர் பக்தவத்சலம் ராம மூர்த்தி.
காலசர்ப்ப தோக்ஷம் முதலியவை, ராகு கேது தோக்ஷங்கள் உள்ளவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் ஆகியோர் பலனடைவதற்காக முதலில் பரிகாரத் தலங்களை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
(விநாயகரை விடாமல் தொழுதாலே இந்த தோக்ஷங்கள் விலகும். படமெடுத்து சீறுகிற மிகப்பெரிய ராட்சத நாகங்களையும், அவற்றை யானை லாவகமாகப் பிடித்து தோலை உரித்து கட்டை போல மாற்றி வீசுவதையும் ஒரு நாள் (15-2-2014) கனவில் தரிசித்தேன். ஆகவே இந்த முடிவுக்கு வந்தேன்.)

14- 2- 2014 ல் பாபா ஆலய வேலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளையில், வழியில் ஒரு கார் பாபா ஆலயம் பற்றி விசாரிப்பதை அறிந்து, அவர்களை அணுகியபோது, கீரப்பாக்கம் பாபா கோயில் செல்லவேண்டும் என்றார்கள். என் பின்னால் வருமாறு கூறிவிட்டு, அவர்களுக்கு முன்னால் சென்றேன்.

தொடரும்

Wednesday 14 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 2

இது அந்தக் காலத்து ஜமீன் சொத்து.. வனத்துறை எல்லை முடிந்து, இது இந்த ஊர் மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அனுபவித்து வருகிற பகுதியாக உள்ளது. அவர்களிடம் விசாரிக்கலாம், தந்தால் கோயில் அமைக்கலாம் என்றார்.
கார்த்திக் தனது மாமா பாபு என்பவரிடம் அழைத்துச்சென்றார். அவர் தனது ஊர்க்காரர்களிடம் பேசி, இந்த இடத்தை பெற்றுத் தந்தார்.
இங்கு பாபாவுக்கு கோயில் போன்ற அமைப்புகளை நிறுவ, தலைவரின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும் என இரவு முழுவதும் ஏதோ ஓர் உந்துதல் என் மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் கார்த்திக்கிடம் இது பற்றி தெரிவித்து, அவருடன் தலைவரைப் போய்ப் பார்த்தேன்.
அந்தத் தலைவர் பெயர் ஹரிகிருஷ்ணன். ஓர் அரசியல்வாதிக்கு உரிய எந்த பகட்டும், பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தார்.
தலைவர் பொறுப்பு வரும் போகும்.. இது நிரந்தரம் அல்ல. ஆனால், இந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்து அவர்கள் மனதில் நிற்கவேண்டும். எனக்குப் பிறகும் என் பெயரை இந்த மக்கள் நினைக்கவேண்டும் என நினைக்கிறவன் நான். கடவுள் எனக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார். இந்த ஊர் மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற வேட்கையில் சேவை செய்கிறேன்.. என்ற அவர், நானும் சாயி பக்தன் தான்.. பாபாவுக்கு மலையில் கோயில் அமைக்க முயற்சி செய்தேன்.. ஏனோ முடியவில்லை என்றார்.
சிறிது நேரம் யோசித்து, அந்தப் பணியை நான் எடுத்துச் செய்ய ஆட்சேபனையில்லையே- எனக்கேட்டேன்.
நிச்சயமாக இல்லை. ஊர் மக்களிடம் பேசி அனுமதி பெற்றுத் தருகிறேன். வேறு ஏதேனும் பார்மாலிட்டி இருந்தால் முடித்துக்கொண்டு கட்டுங்கள். நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்றார்.
அவருடன் சென்றபோது, நீலமேகம், வெங்கட்ராமன் போன்ற ஊர்ப் பெரியவர்கள் இந்த ஊரில் பாபா வந்தால் பெருமைக்குரிய விக்ஷயமாக இருக்கும். அதற்கு ஒத்துழைப்பு தருகிறோம் என்றார்கள்.
ஊர் மக்கள் நல்லவர்கள்.. ஊர்த் தலைவரும் நல்லவராக இருக்கிறார். எனவே, இந்த ஊரை பாபா தேர்வு செய்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.
பாபா, இந்த நல்ல ஊரில் கால் எடுத்து வைக்கிற நேரம் அனைவரும் சுபீட்சமானவர்களாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தலைவருடன் அந்த மலையைப் பார்வையிடச் சென்றேன்.
மலை முழுவதும் கள்ளி முள். நடக்க முடியுமா? என மனதுக்குள் கேட்டபோது, ஒருவரது செல்போனில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. ஏற்றிவிடப்பா.. தூக்கிவிடப்பா என்ற ஐயப்பன் பாடல் ஒலித்தது.
சற்று நேரத்தில்.. ஓர் ஒலிப் பெருக்கியில், கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? என்ற பாடல் ஒலிபரப்பானது..
அது கீரப்பாக்கம் மலைதானோ- நல்ல சகுனமாக இருக்கிறதே என நினைத்தபடி மலை ஏறினேன்.

எல்லாம் மங்களகரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கீரப்பாக்கத்திற்குச் சென்றால், அனைத்து பிரச்சினைகளும் கிள்ளுக்கீரைகள் போல கிள்ளப்படும் என பாபா மாஸ்டர் இதைப் பார்வையிட்டு வாழ்த்தினார். அனுபூதி சித்தர் இந்த இடத்தை ஆசீர்வதித்தார். காசிலி சுவாமிகள் வந்து இந்த ஊர் உலகப் புகழ் பெற்றதாக மாறும் என்றார்.

தொடரும்

Tuesday 13 May 2014

கீரப்பாக்கத்திற்கு பாபா வந்த தகவல்..பகுதி 1

சீரடி கிராம மக்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்களோ, அவர்களுக்கு இணையானவர்கள் கீரப்பாக்கம் கிராம மக்கள்.
இந்த ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமையப் போகிறது என்பது நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒன்று. அதேபோல, கோயில் அமைவதற்கு முன்னதாகவே பாபாவுக்காக மூன்று சிலைகள் தயார் நிலையில் இருக்கின்றன.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த கிராமத்திற்கும் பாபாவுக்கும் பூர்வ ஜென்ம வாசனை நிச்சயமாக உண்டு என அடித்துக் கூறமுடியும்.
கோயில் கட்டிவிட்டு, சிலை வைக்க முடியாத நிலையுள்ள இடங்களைப் பார்த்திருக்கிறோம். சிலை வாங்கிவிட்டு, கோயில் கட்ட இடமின்றி தவிக்கும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், இங்கே எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. எடுத்துச் செய்கிற வசதி உள்ளவர்கள் குறைவு என்பதைத் தவிர. இந்த ஊர் மக்களும், ஊரை ஆளுகின்ற தலைவரும், அவரது மன்ற உறுப்பினர்களும், ஆலோசகரும் கூட தெய்வ பக்தி மிக்கவர்கள். இவர்களின் ஒற்றுமை உணர்வுக்கு இறைவன் இரக்கம் காட்டுகிறான்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். கால்நடைகள் கூட, இந்தப் பக்கம் வந்து ஆலயம் தோன்றவுள்ள இடத்தில் கூடி நின்று பிறகு செல்கின்றன. இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை என்கிறார்கள் அவ்வூர்க்காரர்கள்.
நினைத்ததற்கு மேலாக பணிகள் நடந்து வருகின்றன. பாபா நடத்திக் கொள்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
கோயில் கட்ட வேண்டும் என பாபா உங்கள் கனவில் வந்து சொன்னாரா? என கேட்கிறார்கள்.
நிச்சயமாக பாபா கனவில் வந்து இங்கு கோயில் கட்டச்சொல்லவில்லை. வாழ்நாளில் என் பங்களிப்பை இச்சமூகத்திற்குச்செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வு முன்னோக்கித் தள்ளுவதாலும், சமதர்மத்தை நிலை நிறுத்தும் சாயி கோட்பாடு பரவவும் கோயில் கட்ட முனைகிறேன்.
பெருங்களத்தூரைச் சுற்றிலும் பாபாவுக்கு கோயில்கள் அமைக்கவே தணியாத ஆசை. ஆனால், இங்கு இடமதிப்பு நாளுக்கு நாள் அதிகமாவதால், என்னால் இடத்தை வாங்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் ஒரு பெரியவர் நண்பகல் வேளையில் கோயிலுக்கு பாபாவை தரிசிக்க வந்து, பேசிக்கொண்டிருந்தார். அவர் அவ்வளவு படித்தவராகத் தெரியவில்லை. ஆனால் எனது எழுத்துக்களை, சேவையை வெகுவாகப் புகழ்ந்தார்.
தற்கொலை செய்துகொள்ளப் போகிறவன்கூட உனது புத்தகத்தைப் படித்து மறுவாழ்வு அடைகிறான். பலரது வாழ்க்கை உன்னால் திரும்பத் தரப்படுகிறது. அப்படிப் பட்ட சக்தியை பாபா உனக்குக் கொடுத்திருக்கிறார், ஆனால் நீ பாபாவுக்கு ஒரே இடத்தில் இங்கு கோயில் அமைத்திருக்கிறாய்.. நான்கு திசைகளிலும் அவரை உட்கார வைக்கவேண்டும். அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என பாபா எதிர்பார்க்கிறார் என்பது போல பேசிவிட்டுச் சென்றார்.
இடம் எங்கே மலிவாகக் கிடைக்கும் எனக்கேட்டபோது, கூடுவாஞ்சேரியின் உள்ளே சென்றால், பெருமாட்டு நல்லு}ர் என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று கேளுங்கள், அதன் சுற்றுப்புறத்தில் கேளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில்தான் கார்த்திக் என்ற தம்பி நமது கோயிலுக்கு வந்தார். வழக்கமாக வருகிற அவர், ஏதோ பிரச்சினையின் காரணமாக, பல மாதங்களாக வரவில்லை. அவரை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்திருந்தேன். இதனால் அவரிடம் இடம் பற்றி விசாரித்தேன்.

அந்தத் தம்பியோடு, கீரப்பாக்கம் வழியாக வந்தபோது, இந்த மலை அடிவாரத்தைப் பார்த்து, அழகான பகுதியாக இருக்கிறது.. இங்கு பாபாவுக்கு கோயில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.. ஆனால் இது வனத்துறையிடம் இருந்தால் அவ்வாறு செய்ய இயலாதே எனத் தெரிவித்தேன்.

தொடரும்