இதுவரை
நீ எனக்குக் கொடுத்த சேவையை நான் நிறைவாகவும்,
முழுமையாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்திருக்கிறேன்.. நான் பிறர் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆனால் பாவம்
செய்ததில்லை. செய்த
பாவங்களும் பிறர் மீது இரக்கப்பட்டதால்
செய்யப் பட்டவையாகவே இருக்குமே தவிர, சுயநலத்தினால் செய்தது கிடையாது..
என்னை
பிறர் வெறுக்குமளவுக்கு நான் நடந்திருப்பேன் என்றால்,
அது என்னை அவர்கள் புரிந்து
கொள்ளாததால் ஏற்பட்ட
விளைவாக இருக்குமே தவிர, என்னால் வந்ததல்ல
என்பது உங்களுக்குத் தெரியும்.
நான்
இந்த சீரடிக்குச் சொந்தக்காரன் என்பது உண்மையானால், என்னை வரிசையில் நடக்கவிடாமல்
தரிசனம் கொடு எனக் கேட்டேன். யதேச்சையாக
ரமேஷ் வந்து, சீரடியில் உள்ளவர்கள் மட்டும் வந்து செல்லும்
வழியில் என்னை அழைத்துச்சென்று தரிசனம் செய்ய வைத்தார். இதுவரை
செய்த பாவங்கள் நம்மைப் பிரித்து வைத்திருந்தன. இப்போது நான்
செய்த புண்ணியம் உன்னை என்னுடன் சேர்த்து வைத்திருக்கிறது. இதோ புண்ணியத்தின் மிகுதியால் இப்போது இந்த சீரடியிலிருந்தபடி
உன்னுடன் சேரப்போகிறேன்..
நான்
முடிக்காமல் குறையாக விட்டு வரும்
களப்பணிகளை செய்ய தகுதியானவர்களை உருவாக்கு..
என பிரார்த்தனை செய்தபடி படுத்துக் கொண்டேன்..
மாலைவரை
வலி போகவில்லை.. இதை வெளியே சொல்லவும் தயக்கம்,
மருத்துவரிடம் போகவும் விருப்பமில்லை. என்னால்
யாரும் தங்கள் தரிசனத்தைத்தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக
இருந்து, படுத்துக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு ஆழ்ந்து
உறங்கிவிட்டிருக்கிறேன்.
பாபா
கனவில் தோன்றி, “உனக்கு இந்த கட்டிடம் வேண்டுமா? அந்தக்
கட்டிடம் வேண்டுமா? எனக்கேட்கிறார்கள். நீயானால் என்ன செய்திருப்பாய்? நீ
ஒரு முட்டாள்.. எனக்கு அந்தக் கட்டிடம்
தான் வேண்டும் என்றிருப்பாய். ஆனால் எனக்கு இந்தக்கட்டிடம்
தேவைப்படுவதால் இதை வேண்டும் எனக்கேட்டேன்!”
என
எனது உடல் மீது கை
வைத்துச்சொல்வதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்..
இதற்கு என்ன பொருள் என
விளங்கவில்லை. வலி குறைந்திருந்தது.. பிறகு
மெல்ல எழுந்து பாபாவை தரிசிக்கச் சென்று, பிறகு கண்டோபாவில்
மதன் பாபாவை தரிசித்து அறைக்குத் திரும்பினேன்.
மறுநாள்
சத்சங்கம் செய்யவில்லை. கலியனிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். எனது இயல்பு நிலை
பாதிக்கப்பட்டிருப்பது எனக்கே
புரிந்தது. மற்றவர்கள், கோதண்டபாணிக்கு ஏற்பட்ட நிலையால் நான்
பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தார்கள்.
வீடு திரும்பிய பிறகும் இந்தக் கனவைப்
பற்றியே சிந்தித்தேன். பொருள் விளங்கவில்லை.
கீரப்பாக்கத்தில்
வேலைகள் நன்றாக நடந்து கொண்டிருந்தன. முனுசாமி ஐயா,
இன்னொரு சிலையையும் நான் தான் தருவேன்
என்று அடம்பிடித்து அதற்கான டி.டியை எடுத்துத்
தந்தார்.
முன்னாள்
வட்டாட்சியர் சம்பந்தம் ஐயா உட்பட, சாயி
பக்தர்கள் மாவட்ட ஆட்சியர் அனுமதி
பெற்றிட ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். கீரப்பாக்கம் பொதுமக்கள், தங்கள் பகுதியில் பாபா
ஆலயம் மற்றும் நலப்பணிகள் வருவதை வரவேற்று கையொப்பம்
இட்டு கடிதம் வழங்கினார்கள். பக்தர்கள் செங்கல், மணல் உட்பட அனுப்பினார்கள்.
எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
மறுநாள்
அதிகாலை, பிரார்த்தனையை முடித்துக்கொண்டு அறையில் தனித்து அமர்ந்திருந்தேன்.
என் தம்பி போனில் அழுதபடி, அண்ணா,
சிவா அண்ணன் இறந்துவிட்டார் என்றான். தொடரும்

No comments:
Post a Comment